Thursday, 23 June 2016

நமைச்சல்


செத்துப் போன தன்மைகளின்
நமைச்சலை சொரிந்து கொண்ட ஒரு அந்திம ராத்திரி
நிசப்தத்தில் நின்றிருந்த என் கனவுகளின் ஒன்றில்
இளஞ்சூட்டு வெளிச்சத்தில் என் தோண்டி எடுத்த
பழைய பிறக்காத உணர்ச்சி பிதுக்கல்களை கண்டேன்
தகிப்பின் வெறி வெளிக்கொணர்ந்த ஒன்றில்
அன்று மூழ்கி செத்து போனது ஒன்று
மழைவில்லில் நனைந்த உச்சி பகல் பொழுதில்
செருக்குடன் உற்றுப்பார்த்த
எண்ணப்பேராவலில் கிளர்ந்தெழும்
என் ரகசியங்களை திறந்த சமயம்
காற்றின் இரைச்சலில் கலந்து போனது ஒன்று
ஆதியாய் நான் வாசித்த
என் நரம்புகளில் பீறிட்ட இசைப்பொதுக்கல்களில் இன்னும்
இன்னும் என்னிடம் கிடைக்கா ஒன்றின்
எஞ்சிய ஓட்டின் உள் பக்க வெளியில்
தகித்து கொண்டிருந்த என் ஏளனப்பார்வையின்
மௌன வ்யாக்கானங்களை இழுத்தெடுத்த போது
செத்தது ஒன்று
ஏதும் கிடைக்கா பசியின்
ஏக்கமிக்க அலட்சிய கண்களில்
நாள் தொட்டு வளர்த்த
என் அங்கலாய்ப்பின் மூட்டையை அவிழ்த்து ரசித்துக் கொண்டு
இன்னும் கிடைக்கா என் தீனியின் கனவில்
மூர்ச்சையற்று உறங்கியதும் செத்து போனது ஒன்று
என்னோடு படர்ந்து வளர்ந்து
கட்டுப்பாட்டின் வெளிக்கொணர்வில்
தன்னை மூழ்கடித்து வாய் கடித்து
தன் கணப்பின் ஆங்காரத்தை அடைத்து
முளைக்க வழியில்லா நிலத்தின்
வெறுமையின் பகட்டை என்னிடம் கொணர்ந்த போது
செத்து போனது ஒன்று
அழிவின் கடைசி தினத்தில்
நான் பாதுகாத்த என் சொந்த தன் முனைப்பை
பகிர்ந்து கொள்ள தைரியமில்லா என் அடிமைத்தனத்தின்
ஒரே சுதந்திரத்தை நான் பறி கொடுத்த போது
செத்தது ஒன்று
இன்னும் பேராவலில் இரைச்சலில்
மௌனத்தில் கடுகடுப்பில்
வன்மத்தில் அழிவின் உற்று நோக்குதலில்
கை பிசைந்து நிற்கும் அவலை பசி நீங்காத வரை
தீராத நமைச்சல் எனக்கு!

No comments:

Post a Comment