Wednesday 29 June 2016

அவள்

கூந்தல் பரப்பில்
தொங்கும்
ஊசலாட்டம்
ஒளிர்த்தும்
கசங்கிய வெளியினில்...
முதல்
கடைசியில்
தீண்டிச் சுழலும்
கனவுகளுக்கடியில்...
எதிர்ப்படும்
முகங்களிலெல்லாம்
தெறித்து சிதறும்.
நிலையின்றி
அலைவுறுத்தும்
பெயர்...

சுவாசம் உறிஞ்சி
நிரப்பும்
உயிர் வெற்று
ஊமைப் புலம்பலில்
அவிழ்த்து
சதைகளாய்
எறியும்
மாசற்ற
தழல் துளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
புழுத்துடிப்பு....
சிறு துண்டங்களாய்
அரிகையில்
உள்...வெளி...அந்தரம்...

கூர் நுனியில் வன்முறை
போதை வஸ்து
மயங்கிய குறுக்குவெட்டு
இல்லாமையில் நிறைவு
தூயதின் வெறுப்புமிழ்வு
அகால புகலிடம்
சாட்சியின் தன்னிரக்கம்
சுகங்களின் சமர்
சுயத்தின் ஒட்டுண்ணி
காட்சியில் வெளி
கலையும் மேகப்பூச்சு
புவியின் ஈர்ப்பு!




















Monday 27 June 2016

இறந்தவனின் இதயம்


படிமங்களின்
இதயக்கூட்டில்
அலைக்களிப்பின் துடிப்பில்
மீட்டு செல்லும் 
துணுக்கு பொதுக்கல்களில்
நீ....
அகாலமெனும் 
சீர்மையின்
வெளிச்சமில்லா நரம்புகள்
காற்றின் தீராப்பக்கங்களில்
சிராய்க்கும் இலைக்கணுக்களில்
வடிவமின்றி
ஒருமையை நாடும்
மறைத்து வைத்திருக்கும்
நெரிசலில் 
துடிக்கும்
நீ...
வீரியமின்றி 
கனத்து தொங்கும்
விதைக்கொட்டையாய்
புண்ணின் பழுத்த
நாற்றமடிக்கும் வீச்சமாய்
விடாப்பிடியின்றி
நழுவும்
போதையில்
அமிழ்ந்து அடங்கிக் கொள்ளும்
துண்டுபட்டு 
ஒழுக்கும் சழுவைகளில்
மாமிசச் சளியாய்
உன்னில் நினைவுறுத்துகையில்
கருகிய வெளியில்
என்னிலும் நீ... 

Friday 24 June 2016

பிரக்ஞை

உயிருள்ள
ஒன்றை நான் தேடிக்கொண்டிருக்கும் போது
இன்னும் இறக்கா ஒன்றின்
மூலை இருளாய்
வானத்து முடுக்குகளும்
இருளை மறக்கடிக்க...

வாய்ப்பிழக்கா...

மிகப் பிரக்ஞையான ஒன்றின் இருப்பில்
இன்னும் நான் சுழன்று கொண்டிடுக்கிறேன்
என்பதை நம்பும் பொழுது
நாம் "மனிதமாகிறோம்"!

அலையடிப்பு

ஒன்று
அடுத்து
மிதந்து
மூழ்கி
கரைந்து

யார்?
ஆம்! நான் தான்....
கரையில்!!!

Thursday 23 June 2016

புழுவெட்டிகள்




மனிதன் தோண்டி புதைக்கும்
மேற்பக்க பிதுக்கலின்
பைத்தியக்காரத்தனம் அசையவும்
அசையாது கடிக்கவும்
கீழ்ப்பக்கம் இன்னும் எந்திரிக்கவில்லை
அது தன் உறக்கத்தின் ஓர் கனவில் பாடும் பாடல்
ஒ! மனிதா
நீ வாரிக்கொள்
தள்ளியதை வென்றெடு
சீரிய எதிர்நோக்கில்
காற்றின் சீரமைவில் பயணத்தை முடுக்கு விடு
கழிந்தவைகளை உரசிப் பற்றி எரி
அந்த நகர்வின் மானத்தை காப்பாற்று
உள்ளே தேங்கிய என் கடலின் நுரைகளை மட்டும்
அப்படியே விட்டு விடு
அது உனக்கல்ல”

நமைச்சல்


செத்துப் போன தன்மைகளின்
நமைச்சலை சொரிந்து கொண்ட ஒரு அந்திம ராத்திரி
நிசப்தத்தில் நின்றிருந்த என் கனவுகளின் ஒன்றில்
இளஞ்சூட்டு வெளிச்சத்தில் என் தோண்டி எடுத்த
பழைய பிறக்காத உணர்ச்சி பிதுக்கல்களை கண்டேன்
தகிப்பின் வெறி வெளிக்கொணர்ந்த ஒன்றில்
அன்று மூழ்கி செத்து போனது ஒன்று
மழைவில்லில் நனைந்த உச்சி பகல் பொழுதில்
செருக்குடன் உற்றுப்பார்த்த
எண்ணப்பேராவலில் கிளர்ந்தெழும்
என் ரகசியங்களை திறந்த சமயம்
காற்றின் இரைச்சலில் கலந்து போனது ஒன்று
ஆதியாய் நான் வாசித்த
என் நரம்புகளில் பீறிட்ட இசைப்பொதுக்கல்களில் இன்னும்
இன்னும் என்னிடம் கிடைக்கா ஒன்றின்
எஞ்சிய ஓட்டின் உள் பக்க வெளியில்
தகித்து கொண்டிருந்த என் ஏளனப்பார்வையின்
மௌன வ்யாக்கானங்களை இழுத்தெடுத்த போது
செத்தது ஒன்று
ஏதும் கிடைக்கா பசியின்
ஏக்கமிக்க அலட்சிய கண்களில்
நாள் தொட்டு வளர்த்த
என் அங்கலாய்ப்பின் மூட்டையை அவிழ்த்து ரசித்துக் கொண்டு
இன்னும் கிடைக்கா என் தீனியின் கனவில்
மூர்ச்சையற்று உறங்கியதும் செத்து போனது ஒன்று
என்னோடு படர்ந்து வளர்ந்து
கட்டுப்பாட்டின் வெளிக்கொணர்வில்
தன்னை மூழ்கடித்து வாய் கடித்து
தன் கணப்பின் ஆங்காரத்தை அடைத்து
முளைக்க வழியில்லா நிலத்தின்
வெறுமையின் பகட்டை என்னிடம் கொணர்ந்த போது
செத்து போனது ஒன்று
அழிவின் கடைசி தினத்தில்
நான் பாதுகாத்த என் சொந்த தன் முனைப்பை
பகிர்ந்து கொள்ள தைரியமில்லா என் அடிமைத்தனத்தின்
ஒரே சுதந்திரத்தை நான் பறி கொடுத்த போது
செத்தது ஒன்று
இன்னும் பேராவலில் இரைச்சலில்
மௌனத்தில் கடுகடுப்பில்
வன்மத்தில் அழிவின் உற்று நோக்குதலில்
கை பிசைந்து நிற்கும் அவலை பசி நீங்காத வரை
தீராத நமைச்சல் எனக்கு!

மூளித் தேவதை


காணல்

செத்து போனது தலை சம்மாட்டில் ரசித்துக் கொண்டிருந்தது
இருட்டடிப்பு நடந்திருந்த உள் வெதும்பலை சோபை செய்யாது
நினைவு அவள் முந்தானை நறுமணத்தில் ஏங்கி கொண்டிருக்க
தவறி விழ வழியுண்டா என பிரஞ்சையில்லாது குழி தேடியது
தள்ளாட்டத்தில் கள்ளூற தலைக்கேறிய மாய போதை
இல்லாததில் இருப்பதை பிடித்து கொள்ளும் சுயம்
கட்டுப்படா வலிமையுணர்ச்சி சத்தமிட்டது
அது காது நுனிகளின் நக்குதலுக்கு ஆழப்பட்டிருந்தது
உச்சி வரை கலங்கடிக்கும்
அசையும் எல்லா இருப்புகளும் பொதிந்து வைத்த அழகு
அழகை எண்ணுதலில் தோற்கடிக்கப்படும்
எல்லா பிறவிகளுக்கும் சேர்த்து மொத்தமாய் உறிஞ்சி விடும்
அந்தியமில்ல்லா பார்வையில் தீர்ந்து சொட்டு சொட்டாய்
வெதும்பி கிளம்பும் என் வெக்கை
பிறக்க வழி தேடும் தவித்தலை அவள் வருகையின் கால் பதிவில்
ஆதிகாலம் உருண்டையாய் கைகளில் சிக்கிய பெருமிதம்
ரத்தப்படலமாய் அவள் உதட்டு நுனிகளில்
கனவாய் புகை மூட்டமாய் கலைந்து கொண்டிருந்தது விடியல்!

விளித்தல்

கூர்மையாய் இன்னும் காணாது
கண்கள் காட்டாற்று வெள்ளமாய் தள்ளும் இழுப்புகளில்
எட்டி மிதிக்கும் பயம் தொண்டையடைப்பில் உருள
அழைப்பு
ஜென்மம் மறந்து புதுப்பிறப்பின் முதல் வழிதேடல்
அவள் கால் பெருவிரல் நுனி என் நெற்றியை அழுத்த
பேரண்ட சாம்பலாய் நான் கரையும்
மின்னல் கீற்றாய் மறைந்ததுமுதல் முத்தம்
 

புணர்தல்

மேகம் உட்கவரும் பனிவெள்ளம்
கருத்த மேடாய் வெடிக்கத் துடிப்பதாய்
நான் மறைய அவள் வெளிப்படத் துடித்தாள்
துளி கிளறும் பின் உட்கொண்டு எச்சமாய் துப்பும்
இலக்கு தாண்டும் உடல் நிலைபெறாது உருக
நரம்புகளின் ரீங்காரக் குருதியோட்டம்
கிழிக்க கொப்பளித்தது என் மழை
இருட்டுக் காட்டில் உடைந்து சிதறுண்ட
வானத்தின் எல்லா மூலைகளையும்
இன்றாக நீலத்தில் நிலைப்பேற்றுவதில்
அணைந்தது தீச்சுடர் முதல் இருட்டு
 

திருவிழா


பலூனிலும் காத்தாடியிலும்
கைவளைகளிலும் ஐஸ் வண்டியிலும்
இன்னும் காற்றேற்றி சுழன்று
கூவிக் கூவி அலைக்கழிந்தது விண்மீனற்ற இரவு

மண்டையோட்டின் ரகசியம்


மரணத்தின் மூடி கவிழ்ந்து உள் தள்ளும்
அணுக்க உயிர்களின் இன்றியமையாதிருக்கும் ஒன்று
கவிதைகளின் புணர்வெளிகளில் சிதறுண்டு கிடக்கும்
அந்த மண்டையோட்டுகளின் எக்காள இளிப்பின் ரகசியங்கள்
உடைத்தெழும் தருணம்
விம்மல் பீடிக்கும் மனம் நாடிச் சென்று அந்த உயிர்களின்
எஞ்சியிருக்கும் படிமங்களிடம் தங்களின் ரகசியங்களையும்
பகிர்ந்து கொள்வதில் மர்மமேதுமில்லைதானே!

இல்லாமையின் படிமம்


விலகி செல்லுதலில் விடுபடும் ஆன்மாக்களின்
பிணைந்து நகரும் கூறுகளின் அகாலம்
கணத்து கிடக்கும் இறுக்குதல்கள்
உரசிப் பற்றிக் கொண்டிடலாமா எனும் அவாவின்
நிமித்தமும் ஒளிந்து கொண்ட அதன் நீட்சிகளிலும்
கட்டுப்படாத ஊடுருவலும் வெளிப்பாடும்
நடுசாமத்தின் நிலவு மின்மினிகளிடம் ஒளியூட்டும்
விண்மீன்கள் கூர்முனையாய் குத்திக் கொள்ள எத்தனிக்கும்
அந்த விழியசைவில் வெறுமை சூழ்ந்து கொள்ள
இல்லாமை என்பதன் வெட்ட வெளியில்
மறைந்திரா படிமங்களின் வழி அடுத்த நகர்தலில்