Saturday 30 July 2016

வலியுதிர்காலம்


விடாயாய் 
விம்மி முழுங்குது
ஆகாசம்
ஆவியுதிர் காலமோ!

முட்டும் குறி
எம்பிப் பரப்புது
உயிர்த்துணுக்கை
இலையுதிர் காலமோ!

வலிச்சம் காட்டி
நகருது
மேகக்கூட்டம்

வலியுதிர்காலமோ!

உன்மையில் என்மை

உன்மையின்
மிதப்பில்
தவழ்கின்றன
என்மை!
கலியாலாகிக்
கணக்கும்
சுவாசம்!
உடுக்கைத்
துடித்து பற்றுகின்றன
அவிழ்ப்பை!
அங்கு
புலம்பும் மணல்கூறை
அள்ளி
அமிழ்த்துமாம்
நிறையாழி!




அனலாலானது


ஆழியை
மண்ணை
காற்றை
அந்தரத்தை
உடலத்தை
குருதியை
இருப்பை
தகிப்பை
கனப்பை
நிலையை
அசைவை
பிரம்மத்தை
மாயையை
முடிவில்லா சுருளை
ஆழத் தோண்டி
முகம் புதைக்கிறேன்
வெம்மை வெம்மை வெம்மை!

Thursday 28 July 2016

பால்யத்தின் மது

ஸ்பரிசங்களின்
கணநீர்க் கேணியில்
பிணைந்து குழையும்
சிருப்பத்தின் நிறை
கசிந்து ததும்பும்
பொத்து சிதறும்
அத்துவானத்தின் சுஷுப்தியில்
காலமில்லா பெருவெடிப்பில்
அசைவின்றி அணைந்து
கடித்து திங்கும்
நினைவின் படிமம்
தீண்டி
வெளிக்கும்
பிசுபிசுத்த உயிர்த்திரவம்!

Monday 25 July 2016

வலியின் கீர்த்தி


ஆகிறுதியில்
நிணம் தோய்த்து
ஊடுருவும் இருள்
பிரபஞ்சத்தின் தோலைக்கிழிக்கும்
உகிரிடமே...மன்றாடுகிறது!

விளிம்பினில்
குதத்தைக் குத்தி
பொடியாகின்றன மண்டையோடுகள்
அங்கு
ஆழியில் உப்புபொம்மையாய்
வெதும்பி நிற்கும்
வலியின்
ஒற்றை ஆன்மா!

கவிதைகள் நிதானமிழக்கின்றன!


திடூமென்று
வேர்கள் பிடுங்கின
குன்றுகள் பிளந்தன
சூறையால் பிண நாற்றம்
பறவைகளின் எச்சத்துளிகள்
காற்றின் தும்பினைக் கிழித்து
வீழ்கிறது
அணக்கமின்றி
காடு பிறாண்டிய துகள்கள்
மனிதத் தலைகளில்
தீக்கங்காய்
விரவிப்பாய்கிறது
மரணம்!
ஆழத்தின் வெட்டையில்
சூனிய விதைகளின்
உக்கிரம்
மோனத்தின் வாசலில்
கையேந்தி நிற்கையில்
ஓர்மையில் நழுவிய
ஒற்றைக் கனலில்
திரும்பவும்
மீட்டெடுக்கத் துடிக்கிறது
வசந்தம் தீண்டிய
நாக் கொதி!

Wednesday 20 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 3

நீர்த்துப்போன
காயங்களை வைத்து
சூதாடும் போதிலெல்லாம்
கோமாளிகள் இளிக்கின்றன!

அகத்தின் சாசுவதத்தில்
மூட்டைப்பூச்சிகள்
நசுங்க
நாற்றம் இல்லை இல்லை வாசனை!

விழுங்கும்
மிடறுகளில்
என்னை நிரப்பு...
மன்றாடுகிறான்
முகம் சிதைந்து கொண்டிருந்த
பால்ய நண்பன் இல்லை இல்லை எதிரி!

தோற்கடிக்கப்பட்ட
நம்பிக்கையிழந்த
தொலைந்து
மீளாது இன்னும் இன்னும்
மழுங்கடித்த
ஆளுமையின்
மிச்ச சொச்சங்களில்
காறி உமிழ்!

கார் உதிர் வசந்தம்
நின்று நின்று
நினைவுகளின் பிம்பத்தை
பூதக்கண்ணாடியில்
அழுத்திப்பிடிக்கிறேன்!

உன்னிடம் நான் என்பது
எப்பொழுதும்
நா...................ன்!

Sunday 17 July 2016

கடக்கையில்...

ஒரு
வெற்றுக்கை
நீட்டுகையிலெல்லாம்
மூஞ்சை திருப்பிக்கொள்ளலாம்
இல்லை என்று தலையாட்டலாம்
நிற்காது நகர்ந்து போகலாம்
செல்போனில் பேசலாம்
அசிங்கமாய் வெறிக்கலாம்
சில சில்லறைகளை வீசலாம்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்
பரிதாபப்படலாம்
பொறாமைப்படலாம்
சிலக் கெட்ட வார்த்தைகள் உதிர்த்து
அறிவு ஜீவியாகாலாம்
நிச்சயம் நிச்சயமாக
உன் காலடியில்
துடித்துக்கொண்டிருக்கும்
அந்த அகங்காரத்திடம்
கதைக்க இயலாதுதானே?

ஆழ்மனதின் சில விசும்பல்கள் 1

சொப்பனத்தின்
இருள் வெளியில்
வன்மத்தில் பீடிக்கும்
அசைவின்மையின் ஊளை!
கழிப்பறை குளியலறைகளின்
முக்கில் வெறித்து
கூர் நோக்கும்
அகாலத்தின் விழி!
சுவாசம் இறைத்து
உயிர் குடிக்கும் காற்றிடம்
இறைஞ்சும் ஆன்மா!
உணர்வின் பிளத்தலில்
உடல் தின்று
சுகிக்க

தட்டி எழுப்புகிறது
என் நிதானமிழந்த
தொல்குடியின்
அரற்றி பிதுக்கும்
இந்த விசித்திரமான
ஜுரவேகம்!

Wednesday 13 July 2016

ஆதலால் உயிர்த்தெழவில்லை?



பொங்குமாத் திரையாழி
நுரையவிழ்த்து
கால்களை பற்றியிழுக்கையில்

பிரேதங்களின்
முகங்களில்

கார்
பிளந்து கொட்ட
ஸ்பரிசித்து
விசும்புகையில்

சூழ்
போர்த்தி
மயங்கும் அந்தியில்

எல்லைகளின்
விளிம்பு
உடைந்து
வெடிச்சாமானமாகுகையில்

குருட்டின்
ஒளியில்
பின் தொடரும்
தைரியத்தில்

உடலம்
அதிர்ந்து
ஊற்றெடுக்கும்
வலியில் வன்மத்தில்

ஆழம் கப்பிய
இருள்
அந்த பாதை தவறிய
ஆட்டிக்குட்டியிடம்
கேட்டது

"அவன்
உயிர்த்தெழாது
போய் விடில்..."

"உன் நம்பிக்கைக்கு
நான் ஒன்றும் செய்வதற்கில்லை
என்று பரிகாசமாய் இளித்தது
குட்டி!..."






சபிக்கப் (ஆசிர்வதிக்க) படுதல்


தனிமை
கொந்தளிக்கிறது
அணங்கு பீடித்து
நொடியும்
விட்டில் சிறகாய்
துர்மயமாய்
அனல் அலைக்கிறது
வயிறு கிழிய
வெட்டு இழுத்து
வாயில் கட்டை
பற்கள் பொடிகிறது
அழிமுகத்தில் முட்டி
எண்ணற்றதாய்
ஒற்றையாய்
ஒரு ஈன ஊளை
விசும்பைத் துளைக்கும்...

அங்கு
நமட்டும் மௌனத்தில்

சிதையேறத் துணியும்
அந்த ஒரு ஒற்றைத் துளியால்
தழும்பினால் தானே
பேராழி!

Wednesday 6 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 2



தலைகீழ்விகிதத்தில்
சுழியான மதிப்பில்
பணயம் வைத்து
இளிக்கின்ற ஓட்டைப்பல்
ஓட்டை உடைசல்
சாமானமாய்
கசண்டியான சொரித் தேகம்
அசை போடுகையில்
கணத்து
போதம் துடைத்தெறிய
தெறிக்கும் இருள்
அங்கு
என் அம்மையின் மனைவிகளின்
குறிகள்
சாடும்
செம்பழுப்பு நீர்மத்தில்
நகங்களால் குத்தி
இதயத்தை
கூழாக்குகையில்

மகிழ்வும் வாதையும்...


Tuesday 5 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள்



இடுப்பு போத்தல்
நழுவி
உடைந்து
மது வீச்சத்தில்...

தலையணை
நிரம்ப
சர்த்தித்து
முகம் புதைந்து
மூர்ச்சையடைந்து...

நாளைத்
தொடக்குகையில்
மண்டை பிசைந்து
நடுங்குகையில்
தன்னிரக்கத்தைக் கிழித்து
உட்புகுகையில்...

மலக்குழியில்
சாக்கடைத் தொழியில்
முச்சந்தியில்
மாடங்கோவில்
ஓலைப்பறைகளில்
பறக்கைங்கால் சக்கிளிச்சி வீட்டில்
என் பண்டிகைகளின்
கோலாகலங்கள்
உழலும் போது...

அப்பன்
கணவன்
அண்ணன்
தம்பி
மகன்
உறவுகளில்
விடுபட்டு
சமூகக் கூடுதலில்
கைகள் நடுக்கி
நரம்பு பின்னல்களில்
கழிவிறக்குகையில்...

என் பெண்ணின்
கல்யாணத்தன்று
புலியூர்குறிச்சி
மதகில்
மூர்ச்சையின்றி
தலைகீழாய்
கவிழ்ந்து
மண்டை முட்டி
பீறிட்டு,
அதுவரை பரிகாசப்படுத்திய
என் ஆன்மா விலகுகையில்
இன்னும் ஒரு மிடறு....
இருந்திருக்காதா?






Monday 4 July 2016

கவிதையின் ஏமாற்றம்


ஒவ்வொரு
உயிர்த்தெழுகையிலும்
மனிதத்தின்
சூம்பிய தேகத்தில்
கன்றிப் புடைத்தது!

தெரு முக்கில்
குடல் மலந்து
கூர் நகங்களில்
கிழிந்தது!

நடு நிசியின்
மோனத்தில்
சாக்கடை குழிகளில்
பறண்டியது!

ஆடியின்
உடை பிம்பங்களில்
நிழல் பற்றும் பொழுது
அலறியது!

என் விளிம்புகள்
உடைகையில் மட்டும்
அது
ஏமாற்றியது...

Sunday 3 July 2016

காத்திரம்




அன்பில் முத்தம்
கனவில் தாபம்
படிமங்களில் மோப்பம்
வெறுப்பில் எச்சில்
செயலில் வெறி
அறிவில் தவிப்பு
பிரிவில் செயலின்மை
தனிமையில் ஆன்மம்
அவிழ்ப்பில் நிர்வாணம்
கெஞ்சலில் குறுகலில்
தோல்வியின் நிகழ்போதாமையில்
பார்வையின் கூர்
சிறிதும் சிமிட்டுதலின்றி
வெறிக்கும் விழிப்பில்
குதத்தில் உமிழும்
உக்கிரம்!

Saturday 2 July 2016

ஓர்மை


ஒரு
வெற்று முழங்கை
நீட்டுகையில்
சுருக்குகள்
அவிழ்ந்து
சங்கு உடைத்து தொங்கிய
ஓர்மையுண்டு...

நிகழும் பெருங்கணக்கில்
அந்தத் துளி
உறைந்து கிடக்கும்
அது
கலையும் அந்தியில்
இருள் சூழ்கையில்
பதை பதைத்து
வழியும்...

அங்கு தவறாகும்
கணக்குகளும்
விடைகளும்!

கண்கள்



நிலவின் வெண் கொழுந்தோ
வானின் வெளி நீலமோ
விட்டில் பூச்சிகளுக்கும்
மண்ணுள்ளி புழுக்களுக்கும்
சூரியனின் அயர்ச்சியில்
வெந்து மடியும்
பிரவாகப் பேய் இருட்டினுள்
அசைவில்லாது
கணக்குகளிடும்
காலத்தின் மூடுபனியினில்

இருப்பினுள்
தூய்மையின் நிறைவில்
பரிதவிக்கும்
குழந்தைமை
புன்னகையும் அழுகையுமின்றி
திடுக்கிடுகையில்
அவன்(ள்)
கண்களை
வழி(லி)யறியாது தவிர்க்கிறேன்!